- அமாவாசை முன்னோர் தர்ப்பணம், வழிபாட்டிற்கு ஏற்ற நாள்.
- யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும்.
இந்து சாஸ்திரங்களின்படி, மாதம்தோறும் வருகிற அமாவாசை சிறப்பானது என்றாலும், மாசி மாத அமாவாசைக்கு தனி சிறப்பு உள்ளது. மாசி மாதமே சிறப்பானது தான். இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளும், தானங்களும் இரண்டு மடங்கு நன்மைகளை கொடுக்கக் கூடியது என புராணங்கள் கூறுகின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் பிற மாதங்களில் அமாவாசை அன்று மட்டும்தான் முன்னோர் தர்ப்பணம் செய்வார்கள். ஆனால் மாசியில் பெளர்ணமி அன்று கூட முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குவது புண்ணியம் தரும்.
இந்தாண்டில் மாசி மாத அமாவாசை பிப்ரவரி 20ஆம் தேதி (திங்கட்கிழமை) வருகிறது. பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 04.04 மணி முதல் பிப்ரவரி 20 ம் தேதி பிற்பகல் 01.47 மணி வரை அமாவாசை திதி இருக்கிறது. பின்னர் பிரதமை திதி, இதனால் பிப்ரவரி 20ஆம் தேதியை அமாவாசை தினம் கணக்கிட்டுள்ளார்கள். இந்த நாளில் தான் விரதம் இருப்பார்கள்.
மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து தூய்மையான நீரில் நீராடி, விரதத்தை தொடங்கவேண்டும். வீட்டில் இல்லாமல் கோயில் ஆறு, குளங்களில் புனித நீராடினால் நற்பலன்கள் கிடைக்கும். முன்னோருக்கு கோயில் குளம், ஆற்றங்கரை, கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபடவேண்டும். அனைத்து சடங்குகளையும் நிறைவு செய்த பின்னர் அந்தணர்களுக்கு அரிசி, காய்கறி, வஸ்திரம் தானமாக கொடுக்க வேண்டும்.
பித்ருகளாக கருதப்படும் காகத்திற்கு உணவு கொடுத்த பின் தான் நாம் உணவு சாப்பிட வேண்டும். யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும். வீட்டில் மாலை வேளையில் விளக்கேற்றி முன்னோரை நினைந்து வழிபடவேண்டும். தொழில் செய்யும் நபர்கள் மாசி அமாவாசை நாளில் கண் திருஷ்டி பூசணிக்காய் வாங்கி, உரிய நேரத்தில் பொல்லாத கண் திருஷ்டி கழித்து உடைத்தால் நல்லது.
விரத பலன்கள்
பித்ரு வழிபாட்டிற்கு ஏற்ற மாசி அமாவாசையில், விரதம் இருந்து முன்னோரை வழிபட்டால், அவர்களுடைய ஆன்மா நற்கதி அடையும். நமக்கு ஆசி வழங்கி வாழ்த்தும். குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ள கிரக தோஷங்கள், திருமண தடை, உடல் நலக்கோளாறு விலகிவிடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில், வியாபாரம் விருத்தி அடையும்.
மாசி அமாவாசையான இன்று அன்னம் தானமாக கொடுப்பதால் ஆயிரமாயிராம் ஆண்டுகள் பித்ருக்களை திருப்தி செய்த பலன்களை பெறலாம் என்பது விஷ்ணு புராணத்தில் உள்ளது.