சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூரு செல்கிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சசிகலாவின் ஆதரவாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் அவருடைய தலைமையிலான அரசு நேற்றுமுன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
இதனால் சிறையில் சசிகலா மகிழ்ச்சியாக உள்ளார். இந்தநிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(செவ்வாய்க்கிழமை) பெங்களூருவுக்கு செல்கிறார். அவர், பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சந்தித்து பேசுகிறார். இருவரும் பல முக்கியமான ஆலோசனைகளை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் செல்கிறார்கள்.
இந்த தகவலை கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தி தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி பெங்களூரு செல்வதை முன்னிட்டு அங்கு முக்கிய சாலைகளிலும், பரப்பன அக்ரஹாரா சிறையின் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகர துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தமிழக முதல்-அமைச்சர் பெங்களூரு வருவதை முன்னிட்டு பரப்பன அக்ரஹாரா சிறை முன் பகுதியில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உரிய முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே சிறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சிறைக்கு செல்லும் சாலையில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.