சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் நேற்று(20.02.2023) மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் இதனை தெரிவித்துள்ளார்.
சீனாவின் தகவல்
சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவில்லாமல்,இலங்கையின் பிணையெடுப்பை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்ததை அடுத்தே இந்த கருத்தை சீனா வெளியிட்டுள்ளது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய கடனை நிறுத்துவதற்கான கடிதத்தை சீனா ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் அழுத்தம்
இந்த காலகட்டத்தில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் கடன் அசல் மற்றும் வட்டியை, இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை, இது குறுகிய கால கடன் அழுத்தத்தை குறைக்க இலங்கைக்கு உதவுகிறது என்றும் சீனாவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இந்தியாவின் 20 நாடுகளின் குழு ஆகியவை, கடந்த வெள்ளிக்கிழமை உலகளாவிய பொருளாதாரம் குறித்து மெய்நிகர் சந்திப்பை நடத்தியுள்ளன. இதில் இலங்கைப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.