லாஃப் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான மஞ்சள் நிற சிலிண்டர்களை நீல நிறத்தில் மாற்றி ஏற்றிச்சென்ற லொறி ஒன்றிலிருந்து எரிவாயு சிலிண்டர்களை கடவத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடவத்தை நுழைவாயிலில் இருந்து கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் போது லாஃப் நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நிறுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது லொறிக்குள் இருந்த சிலிண்டர்கள் மேலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் நிறம் மாறிய 37 கிலோ 500 கிராம் எடையுள்ள 04 வெற்று சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணையில் வெளியான தகவல்
இதனை தொடர்ந்து சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, கேகாலை பிரதேசத்தில் உள்ள விநியோக முகவர் ஒருவரின் களஞ்சியசாலையில் இருந்து கெரவலபிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு முனையத்திற்கு இந்த சிலிண்டர்கள் கொண்டு செல்லப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக லிட்ரோ நிறுவனத்திடம் வினவியபோது, குறிப்பிட்ட ஆய்வின் மூலம் சிலிண்டர்கள் தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை உறுதி செய்த பின்னரே கெரவலப்பிட்டி முனையத்தில் நிரப்புவதற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.