விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் பெற்றுத்தர முடியாத ஈழத்தை வேறு யாரும் பெற்றுத்தர முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை இதனை தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுக்காக முயற்சிக்கின்றார். இதில் விமர்சிக்க ஒன்றும் இல்லை.
பிரிவினைவாதத்தை விரும்பாது, நாட்டிலுள்ள ஏனைய மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அன்றிலிருந்து இன்றுவரை செயற்பட்டு வருகின்றோம்.
எனினும் இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களை சகல விடயங்களிலும் புறக்கணித்த காரணத்திற்காகவே போராட வித்திட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மாற்றினத்தை வாழ வைத்து, தமிழினத்தைத் தாழ வைக்கும் செயற்பாடுகளில் இனிமேலும் ஈடுபடாமல் தமிழினத்தை வளம்பெற செய்யவேண்டும்.
இதேவேளை, தமிழ் மக்களின் உரிமைகளை கேட்கின்றோம். மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.