உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த நாட்டினுடைய ஜனாதிபதி மிகவும் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று(28.02.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,நாட்டின் ஜனநாயக வரலாற்றிலே மக்கள் ஒரு பெரிய ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தலை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
மக்களின் இறையாண்மை
மக்களினுடைய இறையாண்மையை உறுதிப்படுத்துவது ஒரு நாட்டினுடைய ஜனநாயகமாகுமாகும். குறிப்பாக உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஒரு வருடத்துக்கு முன்பே நடைபெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையத்தினால் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகளை உரிய சட்டரீதியான முறையில் சுயாதீன தேர்தல் ஆணைகுழு மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையிலேயே அரசாங்கத்தினுடைய ஒப்புதலுடன் சட்டமா அதிபருடைய ஆலோசனையுடன் நீதியான முறையில் அமைந்த எல்லாவிதமான ஒப்புதல்களையும் பெற்றுதான் தேர்தல் ஆணையகம் இந்த தேர்தலை பிரகடனப்படுத்தியது.
தற்போது இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் ஒன்று இல்லை என சொலுகின்றார். இல்லாத ஒரு தேர்தலுக்கு எப்படி பணம் வழங்குவது எனவும் தெரிவிக்கின்றார்.
இது ஜனநாயகத்தை ஒரு கேலி செய்கின்ற செயலாகவே இலங்கையிலே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள எல்லா மக்களும் பார்க்கிறார்கள்.
எனவே மக்களினுடைய இறையாண்மையை உறுதிப்படுத்துகின்ற இந்த தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும். இன்றைய சூழ்நிலையிலே ஒரே ஒரு காரணத்தைதான் இந்த அரசாங்கம் சொல்லுகின்றது.
நாட்டின் வங்குரோத்து நிலை
அரசாங்கம் வங்குரோத்து நிலைக்கு எவ்வாறு வந்தது என்று மக்களுக்கு தெரியும். அப்படி இருந்தும் கூட ஜனநாயகத்தை பாதுகாப்பது மக்களுடைய தேர்தல் உரிமைகளை பாதுகாப்பது ஒரு அரசினுடைய கடமை. அந்தக் கடமையை செய்யாமல் இந்த அரசாங்கம் அடித்துக் கொண்டு இன்று ஒரு ஜனநாயக விரோத போக்கை மேற்கொண்டு இருக்கின்றது.
குறிப்பாக இந்த நாட்டினுடைய ஜனாதிபதி இந்த தேர்தல் நடத்துவதற்கு மிகவும் முட்டுக்கட்டையாக இருக்கிறார். ஜனாதிபதி நிதி அமைச்சை வைத்துக் கொண்டுள்ளார்.
21ஆவது அரசியலமைப்பு மாற்றப்பட்ட பின்னர் உண்மையிலேயே அவர் நிதியமைச்சராக இருக்க முடியாது, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை மாத்திரம்தான் வைத்துக் கொள்ளலாம். அப்படி இருந்தும் கூட ஜனாதிபதி நிதி அமைச்சை வைத்துக்கொண்டு அந்த அமைச்சினூடாக இந்த தேர்தலை நடத்தாமல் செய்வதற்கு எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு இருக்கின்றார்.
ஆரம்பத்திலேயே இந்த தேர்தல் நடத்துவதற்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னர் பொதுநிர்வாக அமைச்சினுடைய செயலாளருக்கு கட்டுப்பணத்தை தெரிவு அத்தாட்சி உத்தியோகத்தர்கள் பெறக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அது உண்மையிலேயே ஜனநாயக முறையிலே சுயாதீன ஆணைக்குழுவான தேர்தல் ஆணைக்குழுவினுடைய சுதந்திர தன்மையிலே மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு உத்தரவாக அமைந்திருந்தது.
மீண்டும் ஜனநாயக அமைப்புகளின் அழுத்தத்தின் காரணமாக அந்த உத்தரவு மீளம்பெறப்பட்டது. ஜனாதிபதி ஒரு மந்திரிசபை பத்திரத்தை சமர்ப்பித்திருக்கின்றார்.
அரசுக்கெதிராக போராட்டம்
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளுக்கு நிதி வழங்கக்கூடாது என அதில் சொல்லப்பட்டிருக்கின்றது.
கடுமையான ஒரு கட்டுப்பாட்டை மந்திரிசபை பத்திரத்தினூடாக அவர் சமர்ப்பித்து அதற்குரிய ஒப்புதலையும் பெற்றுள்ளார்.
எனவே இந்த ஜனாதிபதி இந்த தேர்தலை நிச்சயமாக ஒத்திவைக்க வேண்டும் என்கின்ற ஒரு முனைப்புடன் செயறல்பட்டு வருகின்றார் என்பது இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிந்தது.
ஆனால் இந்த தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும் தபால் வாக்களிப்புக்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல் இதுவரையில் ஒத்திவைக்கப்பட்டவில்லை. ஆனால் வாக்களிப்புக்கான திகதிதான் மாற்றப்பட்டு இருக்கின்றன.
இந்த தேர்தல் எந்த விதத்திலேயும் பிற்போடப்பட்டால் இந்த நாட்டிலே பாரிய இரத்த களரி ஏற்படும். ஜனநாயக அமைப்புகள் எல்லாம் ஒன்று திரண்டுவரும், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழே ஒன்றுபட்டு, இந்த நாட்டிலே பாரிய புரட்சி ஒன்று ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது.”என கூறியுள்ளார்.