புதிய அமைச்சரவை நியமனத்திற்காக பொதுஜன பெரமுனவின் 10 உறுப்பினர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாமல் நிராகரிப்பு
மேலும் கூறுகையில்,புதிய நியமனங்கள் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனக பண்டார, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, காமினி லொக்குகே, சரத் வீரசேகர, எஸ்.எம். சந்திரசேன, சி.பி. ரத்நாயக்க மற்றும் தானும் முன்மொழியப்பட்ட பெயர்களில் அடங்குவதாக திசாநாயக்க குறிப்பிட்டார்.
இருப்பினும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச உட்பட ராஜபக்சர்களின் பெயர் புதிய அமைச்சரவை நியமனத்திற்கு பரிந்துரைக்கப்படவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி மட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.
குறித்த பட்டியல் ஏற்கனவே உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்குமாறு பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இதேவேளை தற்காலிகமாக அமைச்சரவைக்கு பதிலாக சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தது.
பல்வேறு காரணிகளினால் நிலையான அமைச்சரவை நியமனம் இழுபறி நிலையில் இருந்த நிலையில் இந்த மாதத்திற்குள் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் துறைமுகம், நெடுஞ்சாலைகள், விவசாயம், போக்குவரத்து, பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி உள்ளிட்ட அமைச்சுக்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன.
தற்போது 22 ஆக உள்ள அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 32 ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.