- திரவுபதி, சிவபெருமானை தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று மறைந்துவிட்டாள்.
- இமயமலையில் பாண்டவர்களுக்கு சிவன் காட்சி தந்த இடமே ‘கேதார்நாத் ஆலயம்’ என்பது புராணக் கதை.
மகாபாரத யுத்தம் முடிந்த நிலையில் தர்மர் ஆட்சியில் அமர்ந்தார். அவர் ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர், துவாரகைக்கு சென்று விட்டார். 36 ஆண்டுகள் ஆட்சி செய்த தர்மர், ‘கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார்’ என்ற செய்தி அறிந்ததும், துயருற்றார். கிருஷ்ணர் இல்லாத உலகில் தங்களுக்கும் வாழ விருப்பமில்லை என்று கருதிய பாண்டவர்கள், தனது மனைவி திரவுபதியுடன் இமயமலை நோக்கி சிவலோக பதவி அடைய புறப்பட்டனர். ஏனெனில் அவர்களின் வம்சத்தினருக்கு, சிவபெருமானே குலதெய்வமாக இருந்தார்.
இமயமலையை பாண்டவர்கள் அடைந்தபோது, அங்கே இரண்டு பாதைகள் இருந்தது. அவர்கள் தவறான பாதையில் நுழைவதை தடுக்க, சிவபெருமான் தன்னை ஒரு பெரிய கல்லாக மாற்றிக் கொண்டு, தவறான பாதையை மறைத்து நின்றார். பீமன் மேலிருந்து விழுந்த பாறையை கண்டு அதைப் பிளக்க தனது கதாயுதத்தை உயர்த்தினான். அப்போது அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார்.
உடனே பீமனும் அவனது சகோதரர்களும் சிவபெருமானை வணங்கி, முக்தி தருமாறு வேண்டினர். அவர்களுக்கு முக்தி தந்த பின் சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமாக மாறினார். அப்போது பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபத்தால் பூமியில் பிறந்திருந்த திரவுபதி, சிவபெருமானை தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று மறைந்துவிட்டாள். இதைக் கண்ட பாண்டவர்கள், தங்கள் மனைவி ஒரு தெய்வப் பிறவி என்பதை உணர்ந்து திரவுபதியை நினைத்து வணங்கினர். திரவுபதி இல்லாதது அவர்களுக்கு பெரும் துயரத்தையும் கொடுத்தது. அவர்களை தேற்றிய சிவபெருமான், ‘இனி பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரவுபதியை அவர்களது குல தெய்வமாக ஏற்று வாழ்வார்கள்’ என்று அருள்புரிந்ததாக சொல்லப்படுகிறது. இமயமலையில் பாண்டவர்களுக்கு சிவன் காட்சி தந்த இடமே ‘கேதார்நாத் ஆலயம்’ என்பது புராணக் கதை.