தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்தக்கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சபாநாயகர் ப.தனபாலிடம் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர், பகுதி வாரியாக எண்ணிக்கை அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். இதனால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டு, 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபையில் அமளி ஏற்பட்டதால் தி.மு.க. உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், தி.மு.க. உறுப்பினர்கள் வெளியே செல்லாமல் அவைக் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். மேலும், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
குண்டுக்கட்டாக தி.மு.க. உறுப்பினர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றியபோது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் சட்டை கிழிந்தது. தி.மு.க. உறுப்பினர்களில் சிலர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலின், துரைமுருகனை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியே தூக்கி வந்தனர்.
தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியே சென்ற நிலையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. உறுப்பினர்களும், ஓ.பன்னீர்செல்வம் அணி உறுப்பினர்கள் மட்டுமே அவையில் இருந்தனர்.
அப்போது, நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், 122 அ.தி.மு.க. உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது அணியைச் சேர்ந்த 11 பேர் மட்டும் அவருக்கு எதிராக வாக்களித்தனர். எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை வெற்றி பெற்றது குறித்த அறிக்கையை கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அனுப்பிவைத்தார்.
சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அளித்த அறிக்கையையும், பத்திரிகைகளில் வந்த செய்தி மற்றும் படங்களை தொகுத்தும், தனது விளக்கத்தையும் இணைத்து அறிக்கையாக கவர்னர் வித்யாசாகர் ராவ் தயாரித்துள்ளார்.
மும்பையில் சட்ட வல்லுநர்களிடம் இதுகுறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. எனவே, கவர்னர் தனது அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இன்று (திங்கட்கிழமை) மும்பையில் இருந்து அனுப்பிவைப்பார் என தெரிகிறது.
முதலில், நேற்றே இந்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், கவர்னர் மாளிகை வட்டாரத்தில் இதுகுறித்து கேட்டபோது, அப்படி எந்த அறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று மறுத்தனர்.
பொதுவாக, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் தமிழ்நாட்டின் நிலவரம் குறித்து மத்திய உள்துறைக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்புவது வழக்கம். அந்த வகையில், இந்த அறிக்கையும் இன்று சேர்த்து அனுப்பப்படும் என தெரிகிறது. கவர்னரின் அறிக்கை வரப்பெற்றதும், அதை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து, உரிய முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.