தமிழர் தாயகத்தில் ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மற்றும் யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்தக் கோரியும், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்கு ஐ.நா. இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாதெனவும் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்னால் இன்று காலை நடைபெறவுள்ள இப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். அத்தோடு, தமது போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் உள்ளிட்ட சகலரும் ஆதரவு நல்கவேண்டுமென இம்மக்கள் கோரியுள்ளனர்.
இப் போராட்டத்தின் தொடர்ச்சி நாளைய தினமும் நடைபெறவுள்ள நிலையில், நாளைய தினம் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்பவதற்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கவுள்ளனர்.
காணாமல் போனோர் தொடர்பாக இதுவரை பல போராட்டங்களை நடத்தியுள்ளபோதும் அவர்கள் தொடர்பான உண்மை நிலை வெளிப்படுத்தப்படாத நிலையில், எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இவ்விடயம் குறித்து பேசப்பட்டு இலங்கைக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டுமென காணாமல் போனோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.