குற்றப்புலனாய்வுத்துறையினர் தம்மை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அறிவிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் நீதியரசர் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை தொடர அனுமதி வழங்கியுள்ளது.
மனுதாரர் சட்டத்தரணியான ரொஷான் தெஹிவல, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்துக டி சில்வா, பெண் எஸ்ஐ செனவிரத்ன, சார்ஜன்ட் துசிதா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி, தாம் தனது மனைவியுடன் ஹொரண நகருக்கு தமது பிள்ளைகளுக்கு சில புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக சென்றதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர் தனது மனைவியை புத்தகக் கடையில் இறக்கிவிட்டு, தனது மனைவிக்காகக் காத்திருந்தபோது, சிவில் உடையில் இருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் அவரது காரைச் சூழ்ந்துகொண்டு குற்றப்புலனாய்வுத்துறைக்கு வருமாறு அழைத்ததாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மறுத்தபோதும், காரணமின்றி தாம் கைது செய்யப்பட்டதாகவும், இரவோடு இரவாக குற்றப் புலனாய்வுப் பிரிவினுள் வைக்கப்பட்டிருந்ததாகவும் மனுதாரர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாகவும், பின்னர் பிணையில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அவதூறான அறிக்கைகள் தமக்கு எதிராக வெளியிடப்பட்டு அவமானத்தையும் மன வேதனையையும் ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.