பொதுவாக ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பலரிடமும் பல தவறான நம்பிக்கைகள் நிலவுகின்றன. இன்று ‘பிரபலமான’ வியாதியாக விளங்கும் சர்க்கரை நோய் குறித்த தவறான நம்பிக்கைகள் என்ன? அவற்றின் நிஜம் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்…
நம்பிக்கை 1: ‘சர்க்கரை நோய்க்கான எந்த அறிகுறியும் நம்மிடம் இல்லை. அதனால் நமக்குச் சர்க்கரை நோய் இல்லை.’
உண்மை: நிஜத்தில், மூன்றில் ஒரு பங்கு பேர், தங்களுக்குச் சர்க்கரை நோய் இருப்பது தெரியாமலே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சிலர், சுமார் 10 ஆண்டுகாலம் கூட சர்க்கரை நோய்க்கு முந்தைய கட்டத்தில் இருக்கலாம். இக்கட்டத்தில் அறிகுறி எதுவும் தெரியாது, ஆனால் உடலின் உள்பகுதியில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்திருக்கும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
தப்பிக்கும் வழி: குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்க்கரைப் பரிசோதனை செய்து வருவதுதான் இதில் இருந்து தப்பிக்கும் வழி.
நம்பிக்கை 2: சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தால் மாவுச்சத்துப் பொருட்களைச் சாப்பிடக்கூடாது.
உண்மை: உடம்பு செயல்பாட்டுக்கு உதவுவது ‘கார்போஹைட்ரேட்’ எனப்படும் மாவுச்சத்து என்பதால், இதை முற்றிலுமாகத் தவிர்க்கக்கூடாது.
தப்பிக்கும் வழி: மிகவும் சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதைவிட, பட்டை தீட்டாத அரிசி போன்ற முழுத்தானிய உணவுகளைச் சாப்பிடலாம். இவை, ரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிடும்.
நம்பிக்கை 3: ஒல்லியாக இருந்தால் சர்க்கரைநோய் வராது.
உண்மை: சிலர் ஒல்லியாக இருந்தாலும்கூட அவர்களின் வயிற்றுப்பகுதியில் அதிகமான கொழுப்பு இருக்கக்கூடும். இடுப்பைச் சுற்றியுள்ள இந்த அதிகளவு கொழுப்பு, ‘டைப் 2’ சர்க்கரைநோயை வரவேற்கும்.
தப்பிக்கும் வழி: சரியான எடையை விட 5 முதல் 10 சதவீதம் கூட அதிக எடை இருந்தால் உடனே குறைக்க வேண்டும். அதற்கு, தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நம்பிக்கை 4: இனிப்புதான் ஒரே எதிரி.
உண்மை: அதிகளவு சர்க்கரைதான் சர்க்கரை நோயைக் கொண்டுவருகிறது என்ற கருத்துக்கு மாறாக, மரபணு, சுற்றுச்சூழல் போன்ற பல விஷயங்களும் சர்க்கரை நோய்க்கு வித்திடுகின்றன.
தப்பிக்கும் வழி: சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்க சர்க் கரையில் கவனமாக இருப்பதைப் போல, புகைப்பழக்கம், குறைவான தூக்கம் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
நம்பிக்கை 5: சர்க்கரை நோய், ஒரு வாழ்க்கை முறை வியாதி மட்டுமே.
உண்மை: டைப் 1 வகை, டைப் 2 வகை, ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் ‘ஜெஸ்டேஷனல் டயபடீஸ்’ என்று மூன்று வகை சர்க்கரை நோய்கள் உள்ளன. கணையத்தால் இன் சுலினை உற்பத்தி செய்யமுடியாத நிலையால் உண்டாவது, ‘டைப் 1’ சர்க்கரை நோய். நம் உடம்பால் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது அல்லது இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாதபோது ஏற்படுவது, ‘டைப் 2’ சர்க்கரை நோய். கர்ப்பம் தரித்திருப்பது போன்ற நிலைகளில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உண்டாவது, மூன்றாவது வகை சர்க்கரை நோய்.
நம்பிக்கை 6: சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவது மனிதர்கள் மட்டும்தான்.
உண்மை: விலங்குகளுக்கும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. குறிப்பாக, ஆண் பூனைகள், பெண் நாய்களுக்கு சர்க்கரை நோய் அபாயம் அதிகம்.
தப்பிக்கும் வழிகள்: வேறென்ன! நம்ம வீட்டு நாய், பூனைகள் ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்ளவேண்டியதுதான்!