6-ந்தேதி, 7-ந்தேதி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை 6-ந்தேதி காலை 5.08 மணிக்கு தொடங்கி 7-ந்தேதி காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 6-ந்தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 6-ந்தேதி, 7-ந்தேதி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதோடு, பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வசதியாக அதிகாலை தொடங்கி இரவு வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 6-ந்தேதி (நாளை) மாசி மகத்தை முன்னிட்டு பள்ளி கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமி நதியில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.