- ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றவேண்டும்.
- நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு கடைப்பிடிக்கவேண்டிய உணவு, பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், ஆயுளை அதிகரிக்க செய்வதிலும் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நோய் பாதிப்புகளுக்கு இலக்காகாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு கடைப்பிடிக்கவேண்டிய உணவு, பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
அதிகம் சாப்பிடக்கூடாது: ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றவேண்டும். அதேவேளையில் அதிகம் உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மனம், உடல் ஆரோக்கியத்திற்கு உணவு கட்டுப்பாடு இன்றியமையாதது. ஊட்டச்சத்து அதிகம் கொண்ட உணவாகவே இருந்தாலும் அதிகம் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறுவதற்கு மிதமான அளவில் சாப்பிட வேண்டும்.
கலோரிக்கும், ஆயுட்காலத்திற்கும் இடையே வலுவான உறவு உள்ளது. சாப்பிடும் கலோரிகளின் அளவை 10 முதல் 15 சதவீதம் வரை குறைப்பதன் மூலம் ஆயுளை அதிகரிக்கச்செய்ய முடியும் என்று ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. குறைந்த கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வது நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வழிவகை செய்யும். தினமும் சாப்பிடும் உணவை முன்கூட்டியே திட்டமிடுவது, அதில் இருக்கும் கலோரிகளின் எண்ணிக்கையை கணக்கிடுவது நலம் சேர்க்கும்.
காபி, டீ பருகுங்கள்: தினமும் காபி, டீ அதிகம் பருகுவது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. அதேவேளையில் தினமும் ஒரே ஒரு கப் டீயோ, காபியோ பருகுவது நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும். அவற்றில் காபின் தவிர கேடெக்சின்கள், பாலிபீனால்கள் உள்ளன. அவை பல சுகாதார நன்மைகளை வழங்கக்கூடியவை. இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் வராமல் தடுக்க கிரீன் டீ பருகுவது சிறப்பானது. டீ மற்றும் காபி பருகுவது நல்லது என்று தினமும் பல கப் அருந்துவது சரியானதல்ல. அதில் இருக்கும் காபினை அதிகமாக நுகரும்போது தூக்கமின்மை, பதற்றம் ஏற்படும்.
நட்ஸ் அதிகம் சாப்பிடலாம்: உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சூப்பர் உணவாக நட்ஸ் கருதப்படுகிறது. அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் வளர்சிதை மாற்றம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்க உதவும். நட்ஸ் சாப்பிடுவது அகால மரணங்களை குறைக்கக்கூடியது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சைவ உணவு: காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கடலை, பருப்பு, விதைகள் போன்றவற்றை சாப்பிடுவது நோய் பாதிப்பை குறைத்து ஆயுட்காலத்தை அதிகரிக்க வழிவகுக்கும். இதய நோய்கள், புற்றுநோய், மன அழுத்தம், அகால மரணம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும். ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே சிறந்தது.
சூப்பர் உணவுகள்: நீண்ட காலம் வாழ உதவும் சில உணவுகள் உள்ளன. அவை உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவும். நோய் அபாயத்தை குறைக்கவும் செய்யும். பச்சை காய்கறிகளின் சாலட், நட்ஸ், பெர்ரி பழங்கள், மாதுளை, காளான், வெங்காயம், பூண்டு, பீன்ஸ் தக்காளி ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும்.
ஊட்டச்சத்துமிக்க உணவுகள் மட்டுமே ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடாது. உடல் உழைப்பும் தேவை. தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அன்றாடம் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் நீண்ட ஆயுளுக்கு வித்திடும். அகால மரணம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும். நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும் என்றால் தினமும் ஒன்றரை மணி நேரத்தை அதில் செலவிடலாம்.
மருத்துவ பரிசோதனை: வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது. பெரும்பாலானோர் அதனை கவனத்தில் கொள்வதில்லை. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, ஹிமோகுளோபின், கொலஸ்ட்ரால் போன்றவற்றின் அளவுகள் சீராக இருக்க வேண்டும். அவற்றில் ஏதேனும் ஒன்று சரியில்லாவிட்டாலும் உணவு பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும்.
தூக்கம் அவசியம்: தூங்குவதற்கு முன்பு மன அழுத்தம் மற்றும் கவலைகளை ஒதுக்கி வைத்து விட வேண்டும். சரியான ஓய்வும், நல்ல உறக்கமும் மனதிற்கும் உடலுக்கும் அவசியம் தேவை. தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். எனவே தூக்கத்துடன் சமரசம் செய்யக்கூடாது. தினமும் உடலுக்கு 5 முதல் 7 மணி நேரம் ஓய்வு கொடுத்தால், மீண்டும் புத்துணர்வு பெற முடியும்.
மது, புகைப்பழக்கம் கூடாது: புகைப்பழக்கத்தை தொடர்வது ஆயுளில் 10 ஆண்டுகளை குறைத்துவிடும். புற்றுநோய் மற்றும் நாள்பட்ட வியாதிகள் ஏற்பட வழிவகுத்துவிடும். மதுவும் ஆயுளை குறைக்கக்கூடியது. அகால மரணத்தை ஏற்படுத்தக்கூடியது.
மஞ்சள் தரும் ஆரோக்கியம்: மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற ரசாயனப் பொருள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அது இதயம், மூளை, நுரையீரல் ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது. குர்குமின் எலிகளின் ஆயுளை அதிகரிக்கும் என்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மனிதர்களின் ஆயுளை கூட்டும் சக்தியும் அதில் இருப்பதாக நம்பப்படுகிறது. தினமும் உணவில் மஞ்சளை சேர்த்து கொள்வது அவசியமானது. இரவில் மஞ்சள் பால் பருகலாம்.