தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கும் ஒத்திவைக்கவும் கூட்டு உபாயங்களை முன்னெடுத்த ஜனாதிபதிக்கு உயர்நீதிமன்றம் தக்க பதிலை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
களுத்துறை, புளத்சிங்கள பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இனிமேலும் தேர்தலை ஒத்திவைக்க இந்த அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட சிலர் மௌனம் காத்த வந்த வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டின் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களின் சார்பாக நீதிமன்றம் சென்றதாகவும், இத்தீர்ப்பின் காரணமாக இந்நாட்டு மக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக நம்பிக்கை வைத்த ஒரே அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதனை பெற்றுக் கொள்ள மேற்கொள்ள முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தொடர்ந்தும் முன் நிற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வங்குரோத்தான நாட்டில் பொருளாதாரத்தை சுருக்கி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய இயலுமை கொண்ட குழு ஐக்கிய மக்கள் சக்தியிடமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.