- தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும்.
- பேட்ஸ்மேனாக இருக்கும் நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தூரில் நடைபெற்ற 3-வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக வெளியேறினர். அதில் டேவிட் வார்னரும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். சமீப காலங்களில் தடுமாறி வரும் அவர் 1, 10, 15 என இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் சுமாராக செயல்பட்டார்.
கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான டேவிட் வார்னர் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அவர் 2019-க்குப்பின் ஃபார்மை இழந்து தடுமாறினார். குறிப்பாக 2019 ஆஷஸ் தொடரில் வெறும் 9.5 என்ற படுமோசமான பேட்டிங் சராசரியில் ரன்களை எடுத்தது போல சுமாராக செயல்பட்டு வந்ததால் நிறைய விமர்சனங்களை சந்தித்த டேவிட் வார்னர் அதை சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உடைத்தார்.
அதிலும் குறிப்பாக தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரராக வரலாறு படைத்த அவர் மீண்டும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்க்கப்பட்டதை விட சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் 36 வயதாகும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஷஸ் தொடருக்கு முன்பாக முடிய உள்ளது. அனைத்தும் நன்றாக செல்லும் பட்சத்தில் அந்த ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி வரை டேவிட் வார்னரை விளையாட வைக்க அவர்கள் விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக இருக்கும் நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும்.
அது போன்ற நிலைமைகள் என்னை போன்றவர்களுக்கும் நடந்துள்ளது. என்னை கேட்டால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் மெல்போர்னில் அவர் தன்னுடைய 100-வது போட்டியில் இரட்டை சதமடித்தார்.
எனவே தனது சொந்த ஊரான சிட்னியில் விளையாடிய அவர் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் சிறப்பாக கேரியரை பினிஷிங் செய்திருக்கலாம். ஆனால் இப்போது இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பாதியில் நீக்கப்பட்டுள்ளதால் அவருடைய கேரியர் முடிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த வகையில் அவருடைய கேரியர் முடிந்தால் அது சிறப்பாக இருக்காது. இருப்பினும் போராடும் தன்மை கொண்ட அவருடைய கேரியர் எந்தளவுக்கு செல்கிறது என்பதை பார்ப்போம்.
என்று பாண்டிங் கூறினார்.