இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலானது. அதில், இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலராகவும், ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும், வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், தமன்னா மற்றும் சுனில் சினிமா நடிகர்களாகவும் நடித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது.
மேலும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் நிறைவு பெறவுள்ளதாகவும் இதில் கலகலப்பான ரஜினியை எதிர்பார்க்கலாம் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் நெல்சனுக்கு நடிகர் ஜாக்கி ஷெராஃப் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது, ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த புகைப்படத்தை நெல்சன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.