காய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தான் தோன்றும். ஆனால், அவற்றில் பலவிதம் உண்டு. மலேரியா, டைபாய்டு, காசநோய், நுரையீரல் சளி, சிறுநீரில் கிருமி, புண் அல்லது சீழ் வைத்தல் போன்றவை காய்ச்சலுக்குரிய சில காரணங்கள். வைரஸ் நோய்களான டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், பறவை மற்றும் பன்றிக்காய்ச்சல்கள் போன்றவையும் அதிகமாக காணப்படுகின்றன. காசநோய் நமது உடலில் எந்தப் பாகத்தையும் தாக்கலாம்.
அதனால், நீண்ட நாட்கள் காய்ச்சல் இருந்தால் அது காசநோயாக இருக்கலாம். அதற்கான சோதனைகளை செய்துகொள்வது நல்லது. வெளியில் தெரியாமல் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய், காசநோய் ஆகியவை நீண்ட நாள் காய்ச்சலுக்கு முக்கியக் காரணங்கள். இதய வால்வுகளில் பாதிப்பு வந்தாலும் காய்ச்சல் வரும்.
ஒருவரின் உடல் வெப்பம் 38.3 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல், 3 வாரங்கள் தொடர்ந்து இருக்கும் நிலையில், அவர் 3 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து பல பரிசோதனைகள் செய்து சிகிச்சை பெற்றும், அதே நிலை நீடித்தால், அதை ‘காரணம் தெரியா காய்ச்சல்‘ என்று மருத்துவ உலகில் அழைக்கிறார்கள்.
பெரும்பாலான மக்கள் காய்ச்சலை மிக சாதாரணமாக நினைக்கிறார்கள். பல நாட்கள் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும், அனைத்து பரிசோதனைகள் செய்தும் குணமாகாமல், மருத்துவர்களை திணறடிக்கும் காய்ச்சல்களும் உண்டு. பொதுவாக காய்ச்சல் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் குணமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில கடினமான வியாதிகள் உடலுக்குள் இருந்தால் காய்ச்சல் எளிதில் குணமாகாது. மேலும் காய்ச்சல் வந்து பல நாட்கள் கடந்த பின்பே மருத்துவர்களை பார்க்கிறார்கள்.
அப்போது மருத்துவர்கள் எந்த பரிசோதனை செய்தாலும் முடிவுகள் கிடைப்பதில்லை. சரியான சிகிச்சை கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. வைரஸ்நோய் பாதிப்புக்கு, பரிசோதனைக்கு தகுந்த மாதிரி சிகிச்சை தரப்படுவதால் காய்ச்சல் குணமாவதில் தாமதம் ஏற்படலாம். இதைத்தான் காரணம் தெரியாத காய்ச்சல் என்று மருத்துவத்துறை சொல்கிறது.