வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படங்களை அரசு அலுலகங்கள், பாடப் புத்தகங்களிலிருந்து அகற்றுக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1991-96 வரை ஆட்சியில் தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிராக கடந்த 1996-இல் சுப்பிரமணியன் சாமி வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அதில் நால்வருக்கும் தலா 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை சமீபத்தில் உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்குப் போய் விட்டனர். ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். மரணமடைந்து விட்ட போதிலும் கூட அவரையும் குற்றவாளியாகவே உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்கள், பாடப் புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சென்னை மெரீனா கடற்கரை அருகே நல்லடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உடலை அங்கிருந்து அகற்றுமாறும் இந்த அமைப்பு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.