‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலாபால். கேரளாவை சேர்ந்த இவரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் விஜயும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணத்துக்குப் பின்னரும் அமலாபால் தொடர்ந்து நடித்ததால், அதற்கு விஜயின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து விஜயும், அமலாபாலும் சுமுகமாக பிரிவது என்று முடிவு செய்தனர். அதன்படி, இருவரும் சென்னை குடும்பநல கோர்ட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி பூங்குழலி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் – அமலாபால் இருவரும் நேரில் ஆஜராகி, ஒருமனதாக பிரிவதாக கூறி பிரமாண பத்திரங்களை தனித்தனியாக தாக்கல் செய்தனர். இதனை அடுத்து வழக்கின் தீர்ப்பை நாளை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.