கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் காணிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (23) நாடாளுமன்றில் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினாலும், இன விரிசல்களினாலும் பாதிப்புக்குள்ளான மக்களின் உரிமைக்கான எழுச்சிப் பயணம் என்ற தொனிப்பொருளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) அக்கரைப்பற்று அதா உல்லா அரங்கில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த காலங்களில் காணிகளை இழந்தவர்கள், காணி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு பிரதானமாக வனபரிபாலன திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களம் ஆகிய மூன்று அரச திணைக்களங்களே பிரதான காரணங்களாக உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் காணிப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்காக வனபரிபாலன திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்களின் அதிகாரிகள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாகாண காணி அளுநர் மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியோரிடையே விசேட சந்திப்பொன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை (23) நாடாளுமன்றத்தில் இச்சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனது தலைமையில் நடைபெறும் இச்சந்திப்பில், அந்தந்த அமைச்சுகளின் செயலாளர்கள் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
இச்சந்திப்பின்போது 3 திணைக்கள அதிகாரிகளுக்கும் மக்களின் காணிப் பிரச்சினைகளை நேரடியாக எடுத்துக்கூறவுள்ளோம். பல இடங்களில், பல்வேறு வகையில் பேசிவந்த பிரச்சினைகளை, நாம் இங்கு ஒரே மேசையில் வைத்து பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
இந்தச் சந்திப்பினால் மக்களின் காணிப் பிரச்சினைகள் பலவற்றுக்கு உடனடி தீர்வு கிடைக்குமென நம்புகிறோம்.
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கமுடியாத காணிப் பிரச்சினைகளை, தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றம் சென்றாவது தீர்த்துக்கொடுப்பதற்கு எம்மாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதை இனியும் தள்ளிப்போட முடியாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.