- 9 சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகர் ஆலயம் சென்று வணங்கி வந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
- ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை கடைபிடிக்கவேண்டும்.
மாசிமாதம் புண்ணிய மாதமாகக் கருதப்படுகிறது. உத்திராயண புண்ணியகாலத்தில் வரும் இந்த மாசி மாதத்தில் செய்யும் நோன்புகள், வழிபாடுகள் எல்லாம் பலமடங்கு பலன்களை அருளும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த மாதத்தில் வரும் அனைத்து விரதங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த மாதத்தில் வரும் விரதங்களைக் கடைப்பிடித்தால, ஆண்டுமுழுவதும் விரதங்களை கடைப்பிடித்த நற்பலன் கிடைக்கும். அப்படி இந்த மாதத்தின் இறுதியில் நமக்கு வாய்த்திருக்கிறது, சங்கட ஹர சதுர்த்தி விரதம்.
சங்கட ஹர சதுர்த்தி விரதம், விநாயகப் பெருமானுக்குரியது. விநாயகரை வழிபடுவது என்பது அனைத்துவிதமான பிரச்னைகளுக்குமான தீர்வை அளிப்பது. பிரச்னைகள் தீரப் பல வழிகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் கடைப்பிடித்துப் பயன்பெற வேண்டிய விரதம் இது.
இன்று அதிகாலையில் நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்கலாம். உபவாசம் இருக்க முடிபவர்கள் நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து விரதமிருக்கலாம். இயலாதவர்கள் ஒருவேளை உணவு உண்டு விரதமிருக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி, விநாயகர் வழிபாட்டில் ஈடுபடலாம்.
வீட்டில் விநாயகரை வழிபடுபவர்கள், ஏற்கெனவே வீட்டில் விநாயகர் விக்கிரகமோ படமோ இருந்தால் அதற்குப் பூஜைகள் செய்யலாம். இருந்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்குப் பூஜை செய்து, அதற்குப் பின் படம் அல்லது விக்கிரகத்துக்குப் பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி வழிபடலாம். இயலாதவர்கள், விநாயகர் அகவல் போன்ற பாடல்களைப் பாடலாம். விநாயகரின் நாமங்களைச் சொல்லி அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகருக்கு எளிய நைவேத்தியங்களே பிரியம். தனியாகப் பிரசாதங்கள் செய்ய நேரம் வாய்க்காதவர்கள் பொரி, கடலை, வெல்லம் முதலியன வைத்து வழிபடலாம். முடிந்தவர்கள் மோதகம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.
ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசனம்செய்வது மிகவும் சிறப்பு மிக்கதாகும். விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேகங்களை பக்தியோடு தரிசனம் செய்தாலே மனக்கஷ்டங்கள் அத்தனையும் தீர்ந்துவிடும். விநாயகருக்கும் சந்திரனுக்கும் செய்யப்படும் தீபாராதனைகளைத் தரிசனம் செய்ய, நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும். தொடர்ந்து 9 சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகர் ஆலயம் சென்று வணங்கிவந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
சங்கடஹர சதுர்த்தி தினத்தில்தான், சந்திரனும் செவ்வாயும் விநாயகரை வழிபட்டு சகல நன்மைகளையும் அடைந்தனர். எனவே, ஜாதகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.