முதலில் ஆடிய இங்கிலாந்து 156 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய வங்காளதேச அணி 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி வங்காளதேசம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இந்நிலையில் வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்தது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்களை எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லரும் 67 ரன்னும், பில் சால்ட்டு 38 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேசம் சார்பில் ஹசன் மக்முத் 2 விக்கெட்டும், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷகிப் அல்-ஹசன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 30 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 51 ரன் விளாசினார். ரோனி தலுக்தர் 21 ரன்னும், லிட்டன் தாஸ் 12 ரன்னும், தவ்கித் ஹிரிடாய் 24 ரன்னும் எடுத்தனர்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாம்பியன் இங்கிலாந்தை வங்காளதேச அணி முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. ஷகிப் அல்-ஹசன் 34 ரன்களுடனும், அபிப் ஹூசைன் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வங்காளதேச வீரர் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.