முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்சவின் கடனட்டையில் இருந்து 400 அமெரிக்க டொலர்களை மோசடி செய்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலக்கம் 117, விஜேராம மாவத்தை, கொழும்பு 7 என்ற முகவரியில் வசிக்கும் ரோஹித சந்தன ராஜபக்ச என்பவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை நடத்தப்படுவதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவுக்கு அறிவித்துள்ளனர்.
ரோஹிதவின் கடனட்டையில் இருந்து 387 அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு இணையப் பரிவர்த்தனைகளை யாரோ ஒருவர் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெருந்தொகை பணம் மோசடி
விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு மேலதிகமாக 184, துவா வீதி, பட்டகன, கோட்டே என்ற முகவரியில் தற்காலிகமாக வசிப்பதாகவும், மார்ச் 3 ஆம் திகதி மாத்தறைக்குச் சென்று கொண்டிருந்த போது தனது கடனட்டை காணாமல்போனதாகவும் நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கிடையில் அட்டையை பயன்படுத்தி மார்ச் 5ஆம் திகதி காலை 10.07 மணிக்கு 167 டொலர்களையும், மார்ச் 6ஆம் திகதி மதியம் 12.21 மணியளவில் 67 டொலர்களையும், அதே நாளில் பிற்பகல் 2.01 மணியளவில் 99 டொலர்களையும் பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர் தனது அட்டையை பயன்படுத்தி பெற்ற பணத்தின் பெறுமதி 105000 ரூபா என நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தன்னிடம் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை விசாரணை செய்து மீள வழங்குமாறு ரோஹித ராஜபக்ச கோரியுள்ளார்.
இது தொடர்பான வங்கி கணக்கு அறிக்கைகளை வழங்குமாறு குறித்த வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.