மகிந்த ராஜபக்ச இன்று வரை நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்திருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து அந்த ஆபத்தில் இருந்து நாட்டை காப்பாற்றியது எனவும் இதனை புரிந்து கொள்ளாது மக்கள் அரசாங்கத்தை குறை கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கம்பஹா நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் வேலை செய்வது போதவில்லை என அரசாங்கத்தை திட்டுவதை நான் அறிவேன். உண்மை அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
2015 ஆம் ஜனவரி மாதம் புதிய அரசாங்கத்தை பெறுபேற்ற போது நாட்டின் பொருளாதாரம் இந்தளவுக்கு மோசமான நிலைமையில் இருக்கும் என்பதை நாங்களும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஒரு வீதியை 5 லட்சம் ரூபாவில் நிர்மாணிக்க முடியும் என்ற போதிலும் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் அதற்கு 10 லட்சம் ரூபாவை செலவிட்டார்கள்.
வெளிநாடுகளிடம் அதிக வட்டியில் கடனை பெற்றே அவற்றை நிர்மாணித்தனர்.
நாம் செலுத்த வேண்டிய கடனை தவணை கூறும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் புருவங்களை உயர்த்துகின்றனர்.
மகிந்த ராஜபக்ச இன்றும் ஆட்சியில் இருந்து இருந்தால், நாடு முற்றாக வங்குரோத்து நிலைமைக்கு சென்றிருக்கும்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததால் நாடு தப்பியது. இதனால், மக்கள் அரசாங்கத்தை திட்டக் கூடாது. அரசாங்கத்தில் இருப்பவர்கள் உண்மையான நிலைமையை மக்களுக்கு விளக்கி கூறுவதில்லை என்பதே இங்குள்ள பிரச்சினை.
பொருளாதாரம் வங்குரோத்து அடைந்து விட்டது என்று நான் கூறினால், இல்லை மேடம் வேண்டாம். கூறினால் மக்கள் பயப்படுவார்கள் என்கின்றனர்.
மக்கள் பயப்படுவது மாத்திரமல்ல, அவர்கள் எம்மை தூஷணத்தில் திட்டுகிறார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.