வடகொரியாவில் கட்டுமான பணியின்போது கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்ட 110 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
கொரிய போர் கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை நடைபெற்ற போர் கொரிய போர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த போரில் இருநாடுகளுக்குமே வெளிநாடுகளின் ஆதரவு இருந்தது. வடகொரியாவை சீனா மற்றும் அப்போதைய சோவியத் ஒன்றியம் ஆதரித்தது.
இரண்டாம் உலகப்போர்
தென்கொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ஆதரவு அளித்தன. குறிப்பாக இந்த போரில் தென்கொரியாவுக்கு பெரும் பக்கபலமாக இருந்த அமெரிக்கா போர் விமானங்கள் மூலம் வடகொரியா மீது ஏராளமான குண்டுகளை வீசின.
இரண்டாம் உலகப்போரின் போது ஒட்டுமொத்த கிழக்கு ஆசியாவிலும் வீசியதைவிட அதிகமான குண்டுகளை வடகொரியா மீது அமெரிக்கா வீசியதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கட்டுமான பணியின்போது ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கொரிய போர் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் பியாங்யாங்கில் 50 ஆயிரம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டத்தை சமீபத்தில் தொடங்கிவைத்த நிலையில், கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
110 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
அப்படி பியாங்யாங்கில் உள்ள ஒரு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக குழி தோண்டியபோது அங்கு 110 வெடிகுண்டுகள், பீரங்கி குண்டுகள், கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் உள்ளிட்ட சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவை இனைத்தும் கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டன.
பின்னர் அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர்.
அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில், வடகொரியாவில் கட்டுமான பணியின்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.