- ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பணிநீக்கம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
- கடந்த ஆண்டு இறுதியில் மெட்டா நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மெட்டா நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றி வருவோரில் பலரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் மட்டும் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்த நிலையில், மெட்டா நிறுவனம் மேலும் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. பணிநீக்கம் பற்றிய அறிவிப்பு வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
பணிநீக்க அறிவிப்புடன், புதிய முடிவு குறித்து மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் ஏப்ரல் மாத இறுதியில் தொழில்நுட்ப குழுக்களில் பணிநீக்கம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் துவங்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். இந்த நடவடிக்கை காரணமாக மே மாத வாக்கில் பிஸ்னஸ் குழுக்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
“அடுத்த சில மாதங்களில், org தலைவர்கள் மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவர். இதில் குறைந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள், புதிய ஊழியர்களை பணியில் சேர்த்தல் உள்ளிட்டவைகளை குறைக்கப்பட உள்ளன. குறைந்த பணியாளர்களை பணியமர்த்துவதன் மூலம் எங்களின் பணியமர்த்தும் குழுவை குறைப்பது என்ற கடின முடிவை எடுத்திருக்கிறோம். பணியமர்த்தும் குழு உறுப்பினர்களிடம், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பற்றி நாளை அறிவிக்க இருக்கிறோம்,” என மெட்டா நிறுவனம் சார்பில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வரும் மாதங்களில் 5 ஆயிரம் ஓபன் ரோல்களை நீக்க மெட்டா முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை பணிநீக்க நடவடிக்கைகள் தொடரும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடு அளிப்பது பற்றி மெட்டா தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.