- முக்கிய விரத நாட்களில் உபவாசம் இருப்பது பலரிடம் காணப்படுகிறது.
- ஆன்மிக ரீதியாக பலரும் இந்த உபவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
ஒரு வேளையோ அல்லது ஒரு நாள் முழுவதுமோ, அவரவர்களின் சக்திக்கு ஏற்ப உணவு, நீர் உட்கொள்ளாமல் இருப்பதை ‘உபவாசம்’ என்பார்கள். ஆன்மிக ரீதியாக பலரும் இந்த உபவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக முக்கிய விரத நாட்களில் உபவாசம் இருப்பது பலரிடம் காணப்படுகிறது. இப்படி உபவாசம் இருப்பதில் 27 வகையான உபவாசம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனை இங்கே பார்க்கலாம்.
* உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதனை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்கள்.
* தேன் அல்லது இளநீர். இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
* பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
* எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
* காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.
* பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
* இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
* மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
* மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
* மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
* கடுமையான விரதங்களுக்கு, 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
* மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
* இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
* ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
* ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
* ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
* ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
* ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து, நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
* ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
* தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து மீண்டும் தேய்பிறை நாட்கள் வரையான விரதத்தில், தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு, வளர்பிறையில் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்க வேண்டும். மீண்டும் தேய்பிறையில ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.
* ஒரு நாள் முழுவதும் வில்வ இலையையும், நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
* ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
* ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிர்களையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
* இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.
* முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
* மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
* வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை இல்லாத உணவுகளை சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
இந்த உபவாசங்களில், எது உங்கள் உடல்நலத்திற்கும், சூழலுக்கும் தகுந்ததோ, அந்த உபவாசத்தைத் தேர்வு செய்து விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல், நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.