திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில், ஜெயலலிதா உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை மட்டுமே வெளியிட்டு வந்தனர். சரியான தகவல் வெளியிடவில்லை.
ஜெயலலிதா சிகிச்சை குறித்து அரசு சார்பிலும் மக்களுக்கு அறிக்கை தரவில்லை. 75 நாட்களில் ஜெயலலிதா மரணச் செய்தி வெளியான போதும் குழப்பம் நிலவியது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் சட்டப்பேரவையில் நிகழ்ந்தவை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கி வரும் ஸ்டாலின்,’கூவத்தூரில் நடந்த கூத்து மக்களுக்குத் தெரியும். அங்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்திருந்தனர். தன்னை அடைத்து வைத்திருந்தாக அறை சாவியை அவையில் செம்மலை காண்பித்தார். அதை அவைத் தலைவர் கண்டுக்கொள்ளவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறையான கடிதம் இல்லை. ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். அதை நாங்கள் ஆதரித்தோம்.
சட்டசபையில் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற முடியாது. காவல்துறையினர்கள் மாறுவேடத்தில் வந்து எங்களை தூக்கிப் போட்டனர். குடியரசுத் தலைவரிடம் இது குறித்து விளக்கமளிக்க நேரம் கேட்டுள்ளோம்.
சசிகலாவின் பினாமியான எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பழனிசாமிக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்களுக்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது திமுக பிரச்னை இல்லை மக்கள் பிரச்னை. ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முன் வரவேண்டும். வருகின்ற 22-ம் திகதி திமுக நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.