ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், அக்கட்சியின் சட்டசபை குழு தலைவராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சசிகலா தரப்பினர் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி என அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சட்டசபை குழு தலைவராக அறிவிக்கப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவியேற்பதை தடுக்கும் வகையிலும், அ.தி.மு.க.வை கைப்பற்றும் நோக்கிலும் ஓ.பன்னீர்செல்வம் அணி தீவிரமாக செயல்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சில எம்.எல்.ஏ.க்களும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபித்தது. எனவே அடுத்தகட்டமாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தீவிர ஆலோசனை செய்துவருகின்றனர்.
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான மதுசூதனன், பொன்னையன், மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், க.பாண்டியராஜன், சண்முகநாதன், மனோஜ்பாண்டியன் உள்பட மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் க.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
1½ கோடி உறுப்பினர்களை கொண்ட அ.தி.மு.க.வின் கொள்கைகள் கோட்பாடுகளை ஒருமுகப்படுத்தும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ போன்ற சமூக வலைத்தளங்களில் இன்று (நேற்று) முதல் கட்சியின் கருத்துகள் முன் வைக்கப்படும். இப்போது இருக்கிற எழுச்சியில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவரும் பங்கு பெறும் வகையில் அனைத்து இடங்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.
ஜெயலலிதா விட்டு சென்ற கட்சி கட்டமைப்புகளை உணரும் வகையில் கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மண்டலங்கள், மாவட்டங்கள், வட்டங்கள் வாரியாக கட்சி கட்டமைப்புகள் அமைக்கப்படும். கட்சியை காப்பாற்றும் வகையில் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் வகையில் லட்சிய பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். இந்த பயணத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஜெ.தீபாவும் கலந்து கொள்கிறார்.
தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் கிளைகள் உள்ளன. அவற்றில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை (24-ந் தேதி) சீரிய முறையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் அன்று மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. முன்னோடிகள் கலந்து கொள்வார்கள்.
அ.தி.மு.க.வில் தற்காலிக பொதுச்செயலாளர் நியமன விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கொடுத்த கடிதத்தை ஏற்று வரும் 28-ந் தேதிக்குள் பதில் அளிக்க கோரி சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். முறையாக பொதுச்செயலாளர் தேர்வு நடக்க வேண்டும். ஒரு கோடியே 62 லட்சம் தொண்டர்களும் தேர்தல் கமிஷன் முன்னிலையில் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.
யாருக்கும் தடையாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. ஜெயலலிதா வளர்த்த கட்சி ஒரு குடும்பத்தின் கீழ் போகக்கூடாது என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். உள்ளாட்சி தேர்தலுக்குள் கட்சிக்குள் நிலவும் குளறுபடிகள் நீங்கும் என்று கருதுகிறோம்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் கொடுத்த திட்ட குறிப்பில் தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டுள்ளார். இந்த அரசு தற்காலிகமானது தான். விரைவில் மக்கள் விரும்பும் நல்ல மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.