இலங்கை அதிபர் சிறிசேனாவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்தித்து, தமிழர்கள் பகுதியில் நடைபெற்று வரும் மறுகட்டமைப்பு பணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் 30 ஆண்டுகளாக நடந்து வந்த போர், 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் முடிவுக்கு வந்தது. போருக்கு பின்னர் இலங்கையில் சேதமடைந்த கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைக்க இந்தியா உதவியது. குறிப்பாக தமிழர் பகுதிகளில் வீட்டுவசதி, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், மின்நிலையங்கள் போன்ற பல துறைகளுக்கு இந்தியா உதவியுள்ளது.
இலங்கையில் சிறிசேனா தலைமையில் புதிய அரசு அமைந்த பின்னர் இந்த மறுகட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் கடந்த சனிக்கிழமை இலங்கை சென்றார்.
கொழும்பு நகரில் அவர் நேற்று இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் முன்னேற்றம், இந்தியா உதவியுடன் நடைபெற்று வரும் மறுகட்டமைப்பு பணிகளின் நிலைமை ஆகியவை குறித்து இந்திய வெளியுறவு செயலாளர் கேட்டறிந்தார்.
முன்னதாக அவர் இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார். அப்போது அவர் இலங்கையின் மறுகட்டமைப்பு திட்டங்களில் தமிழர்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். காணாமல்போன மற்றும் அரசியல் கைதிகளாக சிறையில் உள்ள தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைப்பதில் தாமதம் ஆவதாக அவர்கள் புகார் கூறினர்.
இந்த சந்திப்பு குறித்து இலங்கை அதிபர் சிறிசேனா ‘டுவிட்டர்’ வலைதளத்தில், “இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் 2-வது முறையாக இலங்கை சென்றுள்ளார். இந்தியா-இலங்கை கூட்டு முயற்சியில் நடைபெற்றுவரும் மறுகட்டமைப்பு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான வழக்கமான பயணம் தான் இது என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் நாளை (புதன்கிழமை) சீனா செல்கிறார். இந்தியா-சீனா நல்லுறவு தொடர்பான முதல் சுற்று பேச்சுவார்த்தையில் அவர் கலந்துகொள்கிறார். அதனைத் தொடர்ந்து 23, 24-ந் தேதிகளில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.