- துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள்.
- சிவகாமசுந்தரியை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
நந்திவர்ம பல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்க பல்லவன் தன் பெயரால் நிருபகேஸ்வரி ஈஸ்வரம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட சிவாலயம் தற்போது பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் அம்மன் சிவகாமசுந்தரி. இக்கோவிலில் விநாயக பெருமான், துர்க்கை, முருகன் ஆகிய சாமிகளும் உள்ளனர்.
இக்கோவிலில் உள்ள பசுபதீஸ்வரரை வணங்கி அர்ச்சனை செய்து வழிபட வளம் பெருகி திருமணத்தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. கோவிலில் உள்ள அம்மன் சிவகாம சுந்தரியை வணங்கினால் குடும்பத்தில் நன்மை கிடைக்கும் என்று வழி, வழியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதோஷ நாட்களில் நந்தியெம்பெருமானையும் சிவகாமசுந்தரியையும் வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று கூறுகின்றனர்.
துர்க்கை அம்மனை முறைப்படி வழிபட்டால் நமது வாழ்வில் உள்ள தீமையான கால கட்டம் விரைவில் அகன்று புதிய நல்வாழ்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புவதால் துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் இன்றும் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள்.
துன்பங்களை போக்கும் துா்க்கை அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபட்டால் நீங்காத துயரால் அவதிப்படுபவர்களுக்கு விரைவில் நல்வாழ்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மாறனேரி பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியை முறையாக வழிபடுவோருக்கு விரைவில் நவக்கிரக தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
பிரதோஷ நாளில் இந்த கோவிலில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் குடும்பத்தில் உள்ள தீமைகள் அகன்று கண்டிப்பாக நம் வாழ்வில் நன்மை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ெரயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.