வடக்கு மாகாண ரீதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூவரை நேற்றையதினம் (19-03-2023) காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி. நிதர்சன் அவர்களது தலைமையின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் 22, 24, 26 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் வட்டுக்கோட்டை, சங்கானை, நாவற்குழி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறுகின்றனர்.
பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் போது அவர்களுக்கு எதிராக பல குற்றச்செயல் வழக்குகள் உள்ளதாக அறிய முடிகிறது.
பொலிஸாரின் நடவடிக்கை
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அளவெட்டி பகுதியில், கழுத்தில் கத்தியை வைத்து நகைகள் மற்றும் தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது தொலைபேசி மற்றும் நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டனர். அவர்கள் மூவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.