சுகாதார மற்றும் உயர்கல்வி அமைச்சுக்களை 48 மணித்தியாலங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நலின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி இரண்டு அமைச்சுக்களையும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்சினை 48 மணிதியாலங்களுக்குள் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினையாகும். உயர்கல்வி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் தலையீடு செய்து தீர்வு வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச தகுதியையும் நிர்ணயம் செய்து வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும்.
தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சுகாதார அமைச்சர் தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.
மருத்துவ பேரவையினால் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குறைந்தபட்சம் மருத்துவ பேரவையின் இணைய தளத்தில் காணப்படும் தர நிர்ணங்கள் குறித்த கையேட்டு விபரங்களையேனும் வர்த்தமானியில் அறிவிக்க வேண்டுமென டொக்டர் நலின் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.