முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) விருப்பத்துடன் வந்ததால் ஏற்றுக் கொண்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்று வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற நாமல் ஊடகங்களுக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கருணா புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அது மஹிந்தவின் தேவைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாகவும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தன்னிடம் கூறியதாக ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நாமல்,
இன்று வெற்றுப்பேச்சுக்களை பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பலர், இன்னமும் தமிழீழம் என்ற கனவை கைவிடவில்லை. எனினும் கருணா தமிழீழம் என்ற கனவை கைவிட்டதன் பின்னரே எங்கள் அரசாங்கத்துடன் இணைந்தார்.
அதன் பின்னரே நாட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக போட்டியிட ஆயத்தமாகினார். ஈழம் என்ற கனவை கைவிட்ட ஒருவர் எங்களுடன் இணைவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும் ஈழம் கனவில் உள்ளவர்கள் எங்களுடன் இணைவதே எங்களுக்கு பிரச்சினை.
ஈழம் கனவு தொடர்பில் அல்ல, கருணாவின் புதிய கட்சி கூட்டு எதிர்க்கட்சியின் மலர் மொட்டு பெயரை வைத்துள்ளதாக கூறப்படுகின்றது என ஊடகவியலாளர் மீண்டும் நாமலிடம் வினவியிருந்தார்.
புதிதாக கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டால் ஏதாவது ஒன்று கூற வேண்டும் அல்லவா? இந்த கட்சி தொடர்பில் குறித்த மட்டக்களப்பு அரசியல்வாதிக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கலாம். அதனால் அவர் அவ்வாறு கூறியிருக்ககூடும். அந்த அழுத்தத்தில் இருந்து தப்பித்து கொள்ள அப்படி கூறியிருப்பார். அது குறித்து எங்களுக்கு தெரியாது.
இது மஹிந்தவுக்காக தான் ஆரம்பித்தீர்களா என கருணாவிடம் தான் கேட்க வேண்டும் என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.