மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கான தடையுத்தரவை, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு இன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அறகல போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த போது ஜனாதிபதி மாளிகைக்குள் பெரும் தொகையான பணம் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கிற்கான காரணம்
கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களின் போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து 17.8 மில்லியன் பணம் மீட்கப்பட்டது.
இது பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் அந்த பணத்தை முன்னர் அதனை ஒரு அமைச்சரிடம் கையளிக்குமாறு தேசப்பந்து தென்னக்கோன் கோட்டை காவல்துறையினருக்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராகவே தென்னக்கோனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.