ஹரக் கட்டா என அழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
மனுதாரரான ஹரக் கட்டாவின் தந்தை, சட்டத்திற்கு உட்பட்டு கைதியான தமது மகனின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி இந்த நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
ஏற்கனவே கைதியாக இருந்தபோது மாக்கந்துரே மதுஸூக்கு நேர்ந்த மரணத்தையும் அவர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி
இந்த நிலையில் இன்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஷனில் குலரத்ன, இந்த மனுவை பேணுவதற்கு எதிராக சட்டமா அதிபர் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த ஆட்சேபனையை ஏப்ரல் 4 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் போதைப்பொருள் கடத்தல்காரர் நடுன் சிந்தக அல்லது ஹரக் கட்டா மற்றும் அவரது நண்பரான சலிந்து மல்ஷிக குணரத்ன அல்லது குடு சலிந்து உட்பட எட்டு பேர்; மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
இவர்களில் நடுன் சிந்தக்க மற்றும் சலிந்து மல்சிக்க ஆகியோரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.