முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான 2586 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டின் பின்னர் மாந்தை, கிழக்கு துணுக்காய், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுரைப்பற்று, வெலிஓயா, ஆகிய ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு சொந்தமான பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் படையினர் வசமுள்ளன.
மக்கள் மீள்குடியேறி ஏழு ஆண்டுகளாகியும் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் பல இதுவரை விடுவிக்கப்படாமல் படையினர் வசமே காணப்படுகின்றது.
இவ்வாறு படையினர் வசமிருந்த 1701 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன.
இது தவிர பொதுமக்களுக்குச் சொந்தமான 2586 ஏக்கர் காணிகள் இன்றுவரை படையினர் வசம் காணப்படுகின்றன.
இவ்வாறு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் 49 குடும்பங்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர்காணிகளும் படையினர் வசமே காணப்படுகின்றன.
இதேவேளை குறித்த காணிகளை விடுவிக்குமாறு கோரியே குறித்த மக்கள் 22 நாட்களுக்கு மேலாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.