சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த கோவை குணா நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
இவரின் மறைவுக்கு மதுரை முத்து உருக்கமாக பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சின்னைத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக அறிமுகமானவர் கோவை குணா (வயது 60). பல குரல்கள் மூலம் மக்களை மகிழ்வித்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஒரு வார காலமாக உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து உயிரிழந்தார். இவரின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. கோவை குணாவின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை குணா உடன் இணைந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்காற்றிய மதுரை முத்து இரங்கல் தெரிவித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “20 ஆண்டுகளில் எத்தனையோ கலைஞர்களை பார்த்து விட்டேன் நீங்கள்தான் நம்பர் ஒன். இன்னும் எத்தனை பல குரல் கலைஞர்கள் வந்தாலும் கோவை குணாவிற்கு நிகராகாது. இவரும் நானும் கலக்கப்போவது யாரு பாகம் ஒன்றில் வெற்றியாளராக வந்தாலும். எல்லா கலைஞர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. இளநீரைப் போன்று தூய்மையான அன்பிற்கு உகந்த மனிதர். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
கோவை குணா கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.