- பெரிய பணம் கொடுக்கும் போது சுய ஜாதக பரிசோதனை மிக அவசியமானதாகும்.
- குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள்.
படித்து நல்ல அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப் பெரிய தொழில் அதிபர்கள் தான் அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள். பணத்தை கொடுத்தவர்கள் அசல் வந்தால் கூட போதும் என்று புலம்புகிறார்கள். எந்த ஆதாரமும் இன்றி கொடுத்த பணம் எப்படி வரும்? பணத்தை பெருக்கி தருகிறேன் என்று கூறுபவர்கள் பெரும்பான்மையாக அறிமுகமான மிகவும் நம்பிக்கைக்குரிய உறவுகளாகவே இருக்கிறார்கள். உறவுகளை வெறுக்கவும், ஒதுக்கவும் முடியாமல் பணத்தை இழந்தவர்கள் படும் வேதனை அளப்பரியது.
புதிய தொழில் முயற்சிக்காக தொழிலில் பங்குதாரர் ஆக பணம் கொடுத்து ஏமாறுவது, வீடு, மனை வாங்க இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது, அரசு உத்தியோகம் வாங்கித் தருகிறேன் என்று கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது- மேலே கூறிய இந்த முறையில் சில லட்சம் முதல் பல லட்சம் கொடுத்து வேதனையில் இருப்பவர்களே அதிகம். எந்த ஆதாரமும் இன்றி பல லட்சம் பணத்தை பறிகொடுத்தவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் நடைப்பிணமாக காலம் தள்ளுகிறார்கள்.
பெரிய பணம் கொடுக்கும் போது சுய ஜாதக பரிசோதனை மிக அவசியமானதாகும். ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் தந்தையால் வராக்கடன் உருவாகும். குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள். ஆறாம் அதிபதி பத்தில் இருந்தால் தொழில் சார்ந்த நஷ்ட கடன், கூடிக் கொண்டே இருக்கும். கஷ்டமான தொழில் செய்யும் சூழல், திடீர் விரையம் உண்டாகும். இவர்கள் கடனுக்கு பொருள் விற்பதால் வராக்கடன் கூடும். அதனால் டென்ஷன் மிகுதியாகும். இந்த அமைப்பு உடையவர்கள் கடனுக்கு பயந்து நோயை வரவழைத்துக் கொள்வார்கள். மிகுதியான தொழில் எதிரிகள் உண்டு.
ஜோதிட ரீதியாக வராக்கடன், பண இழப்பு ஏற்படும் காலம் எது?
6, 8-ம் அதிபதி அல்லது 6, 8-ல் நின்ற கிரகத்தின் தசை புத்தி, அந்தரம் நடப்பவர்களுக்கு புதன் தசை நடக்கும் காலங்களில் ஜனன கால ஜாதகத்தில் 7-ம் அதிபதி வக்ரம் பெற்று தசை நடத்தும் போது மேஷம், மகர லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு இயல்பாகவே வராக்கடன் இருக்கும்.
6, 8-ம் அதிபதி லக்னத்தில் இருப்பவர்களுக்கு 7-ம் அதிபதி 6,8-ம் இடத்தோடு சம்பந்தம் இருப்பவர்களுக்கு மேலும் ஜனன கால ஜாதகத்தில் 2,8-ம் இடத்தில் சனி, ராகு/கேது இருப்பவர்கள் அல்லது 2, 8-ம் இடத்திற்கு வக்ர கிரகம் சம்பந்தம் இருப்பவர்கள் யாருக்கும் பணம், பொருள் கொடுத்தாலும் திரும்ப வராது.வயதோட்டத்தின் அடிப்படையில் 19, 28, 37,46, 55, 64,73 ஆகிய வயதில் ஏதாவது ஒரு காரணத்தினால் வராக்கடன் உருவாகுகிறது.
ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து 6, 8, 12 ஆகிய மூன்று பாவகங்களும் ‘துர் ஸ்தானங்கள்’ அல்லது ‘மறைவு ஸ்தாதானங்களாகும். ஒருவர் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை பரிபூரணமாக தருவது இந்த மறைவு ஸ்தானங்களே. மனித வாழ்வையே தடம் புரட்டி போடும் வலிமை கோட்சார கிரகங்களுக்கும் உண்டு.
தசா புத்தியோடு தொடர்பு பெறாத கோட்சார கிரகத்தால் ஏற்படுத்தப்படும் தாக்கம் குறைவாகவும் மாரக தசை, புத்தி யோடும் அதன் அதிபதிகளோடும் தொடர்பு பெறும் கோட்சார கிரகங்களுக்கு சாமானியர்களை கூட உறுத் தெரியாமல் செய்து விடும் வலிமை உண்டு. மறைவு ஸ்தானங்கள் வலிமை பெற்ற ஜாதகருக்கு நித்திய கண்டம் பூர்ண ஆயுள். இவர்கள் வராக்கடனால் மன உளைச்சலை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். லக்ன அதிபதி 6, 8,12-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறும் போது ஜாமின் போடுவது, அல்லது ஏலச் சீட்டில் பணம் கட்டி ஏமாறுவது, குறுக்குவழி அதிர்ஷ்டத்தை நம்புதல் போன்ற காரணத்தால் வராக்கடனையும் சத்ருவையும் உருவாக்கி சொல்ல முடியாத துயரத்தை அடைகிறார்கள்.
பொதுவாக மறைவு ஸ்தானத்திற்கு அதிக கிரகங்கள் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நல்லது. அவை எவ்வளவு கொடுத்தாலும் அவற்றால் ஜாதகர் நன்மை பெற முடியாமல் தவிக்கநேரும். ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் அதிபதி எந்த பாவகத்தில் இருக்கிறாறோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களை சார்ந்து கடன், வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ், அடிதடி, சண்டை, போட்டி, பொறாமை, எதிரி, உத்தியோக பிரச்சிினைகள் இருக்கும். அடுத்தவருடைய கஷ்டத்திற்கு பாவம் என்று உதவி செய்தால் அந்த பாவம் உதவி செய்தவரை விடாமல் துரத்துகிறது. மிகப் பெரிய வங்கிகள், கார்ப்ரேட் கம்பெனிகள், நிதி நிறுவனங்கள் வராக்கடனை வசூலிக்க தனியான ஒரு அமைப்பு வைத்து இருக்கிறார்கள்.
சாமானியர்கள் என்ன செய்வது?
செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு கரும்புச் சாறு அபிசேகம் செய்யவும். செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு நல்லெண்ணையில் சிவப்பு திரி இட்டு 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட மாற்றம் உண்டாகும். விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை ஊரில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அமிர்தேஸ்வரி அம்மனை வழிபட வராக்கடன்கள் வசூலாகும்.