- பிரபல பாடகி வாணி ஜெயராம் சமீபத்தில் அவரது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
- இவரது உடல் 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். ‘வீட்டுக்குவந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ முதலான படங்களில் பாடியிருந்தாலும் ‘தீர்க்கசுமங்கலி’ படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இவர் சமீபத்தில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். இவரது உடல் காவல்துறை சார்பில் 10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடியதும் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதேபோல் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரிமுத்து, தங்கவேலு, சீனிவாசன், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா ஆகி யோரது மறைவுக்கு இரங்கல் குறிப்புகளும் கொண்டு வரப்பட்டன. இவர்கள் மறைவுற்ற செய்தியை இப்பேரவைக்கு வருத்தத்துடன் தெரிவிப்ப தாக சபாநாயகர் அப்பாவு கூறினார். மறைந்த உறுப்பினர்களின் மறைவால் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்வதாக கூறி உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதிகாத்தனர்.