நாட்டில் நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் மக்கள் கோரும் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,
“இந்நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசே ஆகும்.
இந்நேரத்தில் நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையைச் சீர்குலைத்து உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்குப் பல சதித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
பாரிய நெருக்கடி நிலை
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தின் உதவியை நாடியபோது, உயர் நீதிமன்றம் அதைப் பரிசீலித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணத்தைத் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தாலும், அரசு தனக்கு விசுவாசமான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இந்த முடிவைச் சவாலுக்குட்படுத்தியது.
இதன் காரணமாக ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நீதித்துறை, சட்டவாக்கத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் பாரிய நெருக்கடி நிலை உருவாகியது. சட்டவாக்கம் நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசு கடுமையாக முயற்சிக்கின்றது.
இந்த முயற்சிகளை மிகவும் வெறுப்புடன் கண்டிக்கின்றேன். நீதித்துறை உறுப்பினர்கள் அனைவரினதும் கண்ணியமான இருப்புக்காக எதிர்க்கட்சியாக முன்னிற்கின்றது.
நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி நீதிபதிகளைச் சங்கடப்படுத்துதல், அவமதிப்புகளுக்குட்படுத்துதல், வரப்பிரசாத குழுக்கு அழைத்து மானவங்கப்படுத்தல் மூலம் நீதிமன்றத்துறையில் தலையீடு செய்ய அரசு ஆயத்தமாகின்றது.
ஜனநாயகத்தைப் போற்றும் ஒரு மக்கள் பிரதிநிதியாக இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்தச் சதிகளை முறியடிக்க இன, மத பேதமின்றி அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
எனவே, அனைத்து அரசியல் சதிகளையும் கைவிட்டு மக்கள் கோரும் தேர்தலை நடத்துமாறும், இல்லையெனில் சில தரப்புகள் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடலாம் என்பதனால், நாட்டில் இவ்வாறான பாதகமான நிலைமைகள் ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.