தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனை நியமித்து, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த தேர்தலில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால் உட்பட பலர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனுக்களையும் அவர்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி நீதிபதி ராஜேஸ்வரன் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், ‘நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் ஏற்றுக் கொண்டது சட்டப்படி செல்லாது.
தயாரிப்பாளர் சங்க விதி, பிரிவு 20-ன்படி, வேறு ஒரு சங்கத்தில் நிர்வாகியாக இருப்பவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலுக்கு போட்டியிட முடியாது என்று கூறியுள்ளது.
எனவே, இந்த வேட்பு மனுவை நிராகரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர் கேயார், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘விஷால் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை தமிழ்திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கத்தின் விதி களுக்கு உட்பட்டு தான் தேர்தல் அதிகாரியாக நீதிபதி ராஜேஸ்வரன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதில் எந்த விதிமுறை களும் மீறப்படவில்லை. வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது சரியான முடிவு தான். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.