- நோ-பால் மற்றும் வைடு குறித்து ஆட்சேபனை இருந்தால் டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்யும் முறையும் கொண்டு வரப்படுகிறது.
- ஒரு வீரர் 4 ஓவர் பந்து வீசி முடித்த பிறகு அவரை வெளியேற்றி விட்டு கொண்டு வரப்படும் மாற்று வீரரும் 4 ஓவர்களை முழுமையாக வீசலாம்.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்குகிறது. போட்டியில் விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் அதிகரிக்க செய்யும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (இம்பேக்ட்) என்ற புதிய விதிமுறை இந்த ஐ.பி.எல்.-ல் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதன்படி ‘டாஸ்’ போடும் போது, ஒவ்வொரு அணியும் கொடுக்கும் களம் இறங்கும் 11 வீரர்கள் பட்டியலுடன் 4 மாற்று வீரர்களின் பெயரையும் அளிக்க வேண்டும். அந்த மாற்று வீரர்களில் இருந்து ஒருவரை ஆட்டத்தின் போது தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்ற பெயரில் பயன்படுத்தி கொள்ளலாம். இரு இன்னிங்சில் ஏதாவது ஒன்றில் 11 வீரர்களில் ஒருவருக்கு பதிலாக மாற்று வீரரை அணி களம் இறக்கலாம். இத்தகைய மாற்று வீரர் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் ஈடுபட முடியும்.
ஐ.பி.எல்.-ல் களம் காணும் 11 வீரர்களில் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே வெளிநாட்டவராக இருக்க முடியும். 4 வெளிநாட்டு வீரர்களை சேர்த்து இருக்கும் பட்சத்தில் அந்த அணி வெளிநாட்டு வீரரை மாற்று வீரராக பயன்படுத்த முடியாது. அப்போது மாற்று வீரராக இந்திய வீரரை மட்டுமே கொண்டுவர முடியும். லெவன் அணியில் வெளிநாட்டவர் 3-க்கும் குறைவாக இருந்தால் மட்டும் மாற்று வீரர் இடத்துக்கு வெளிநாட்டு வீரரை பயன்படுத்த முடியும்.
ஓவர் முடியும் போது அல்லது விக்கெட் விழும் போது அல்லது பேட்ஸ்மேன் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறும் சமயத்தில் தான் மாற்று வீரரை கொண்டு வர நடுவர் ‘சிக்னல்’ கொடுப்பார். மாற்று வீரர் வரும் போது அவருக்கு பதிலாக வெளியேறும் வீரர், அதன் பிறகு அந்த போட்டியில் களம் இறங்க முடியாது.
ஒரு வீரர் 4 ஓவர் பந்து வீசி முடித்த பிறகு அவரை வெளியேற்றி விட்டு கொண்டு வரப்படும் மாற்று வீரரும் 4 ஓவர்களை முழுமையாக வீசலாம். இது கடைசி கட்டத்தில் அந்த அணியின் சிறப்பான பந்து வீசும் வியூகத்துக்கு பக்கபலமாக இருக்கும். இதனால் இந்த விதிமுறை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் நோ-பால் மற்றும் வைடு நடுவர் வழங்கும் போது அதில் ஆட்சேபனை இருந்தால் அதை எதிர்த்து டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்யும் முறையும் இந்த ஐ.பி.எல்.-ல் கொண்டு வரப்படுகிறது.