- எம்எஸ் டோனி 9 தடவை சி.எஸ்.கே.வை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.
- கெய்ல்தான் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்தவர்.
ஐ.பி.எல். போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்பவர் டோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4 முறை ஐ.பி.எல்.கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார். 9 தடவை சி.எஸ்.கே.வை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். சென்னை அணிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடை காரணமாக ரைசிங் புனே அணிக்கு ஆடினார். அப்போது ஒரு முறை புனே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
41 வயதான டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஐ.பி.எல். போட்டியில் இருந்தும் அவர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இந்த சீசன் அவரது கடைசி போட்டியாகும். கடைசி ஐ.பி.எல்.லில் டோனி கோப்பையை வென்று வெற்றிகரமாக நிறைவு செய்வாரா? என்று சி.எஸ்.கே. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
டோனி 206 இன்னிங்சில் 4978 ரன் எடுத்துள்ளார். சராசரி 39.19 ஆகும். 24 அரை சதம் இதில் அடங்கும். அதிகபட்சமாக 84 ரன் எடுத்துள்ளார்.
கேப்டன் பதவியில் 210 போட்டியில் 123-ல் வெற்றி கிடைத்துள்ளது. 86 ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது. ஒரு போட்டி முடிவு இல்லை.
அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல் அதிக சிக்சர் அடித்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். அவர் 141 இன்னிங்சில் 357 சிக்சர்கள் விளாசி உள்ளார். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப் அணிகளில் 2009 முதல் 2021 வரை ஆடியுள்ளார்.
டி வில்லியர்ஸ் 251 சிக்சர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். ரோகித்சர்மா 240 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும், டோனி 229 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், பொல்லார்ட் 223 சிக்சர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
இதேபோல் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்தவரும் கெய்ல்தான். 2013-ம் ஆண்டு அவர் புனே வாரியர்சுக்கு எதிராக 17 சிக்சர்கள் அடித்து இருந்தார்.
பிராவோ அதிக விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவர் 161 போட்டியில் 183 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். 22 ரன் கொடுத்து 4 விக்கெட் எடுத்தது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். முதல் இடத்தில் இருந்த மலிங்காவை பிராவோ கடந்த சீசனில் முந்தினார்.
மலிங்கா 170 விக்கெட்டு டன் 2-வது இடத்திலும், யசு வேந்திர சாஹல், அமித்மஸ்ரா தலா 166 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் 157 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
அறிமுக ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீரர் சோகைல் தன்வீர் (ராஜஸ்தான்) சென்னை அணிக்கு எதிராக 14 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி னார். ஒரு ஆட்டத்தில் சிறந்த பந்துவீச்சாக 11 ஆண்டுகளாக இருந்த சாதனையை 2019 ஐ.பி.எல்.லில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீரர் அல்ஜாரி ஜோசப் முறியடித்தார். மும்பை இந்தியன்ஸ் வீரரான அவர் ஐதராபாத்துக்கு எதிராக 12 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்து வீச்சாகும்.
2013-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கிறிஸ்கெய்ல் (பெங்களூர் அணி) ஒரு ஆட்டத்தில் 175 ரன் குவித்ததே இன்னும் சாதனையாக இருக்கிறது. புனே வாரியர்சுக்கு எதிராக அவர் 66 பந்தில் 13 பவுண்டரி, 17 சிக்சர்களுடன் இந்த ரன்னை குவித்தார்.
அறிமுக ஐ.பி.எல்.லில் கொல்கத்தா அணிக்காக ஆடிய மெக்குல்லம் பெங்களூர் அணிக்கு எதிராக 158 ரன் எடுத்ததை கெய்ல் 5 ஆண்டில் முறியடித்தார். கெய்லின் இந்த சாதனை 9 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் உள்ளது. இந்த ஐ.பி.எல். போட்டியிலாவது முறியடிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.