- 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு அணியும் உள்ளூர் மைதானம், வெளியூர் என போட்டி முறையில் ஆடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
- லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப் போட்டி வர்த்தக ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்காகவும் அமைந்தது.
இதுவரை 15 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.
16-வது ஐ.பி.எல். திருவிழா நாளை (31-ந்தேதி)தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. கடந்த முறையை போலவே இந்த ஐ.பி.எல் தொடரிலும் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:-
குரூப் ஏ : மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்.
குரூப் பி : சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ்.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறை ஆட வேண்டும். ஒவ்வொரு அணியும் 14 ஆட்டத்தில் விளையாடும்.
4 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு அணியும் உள்ளூர் மைதானம், வெளியூர் என போட்டி முறையில் ஆடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பொதுவான இடத்தில் தான் போட்டி நடந்தது. கடந்த முறை மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை , நவி மும்பை, புனே ஆகிய இடங்களில் மட்டுமே போட்டி நடந்தது.
தற்போது ஐ.பி.எல். போட்டிகள் 12 நகரங்களில் நடக்கிறது. கவுகாத்தியில் முதல் முறையாக போட்டி நடத்தப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உள்ளூர் மைதானமான அங்கு 2 ஆட்டம் நடக்கிறது. இதே போல தர்மசாலாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டி நடைபெறுகிறது. பஞ்சாப் கிங்சின் உள்ளூர் மைதானமான அங்கு 2 போட்டி நடைபெற உள்ளது.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். மே 21-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்று ஆட்ட விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இறுதிப்போட்டி மே 28-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன. 52 நாட்கள் லீக் ஆட்டம் நடைபெறும். இதில் 18 நாட்களில் மட்டும் 2 ஆட்டங்கள் நடக்கிறது. மற்ற தினங்களில் ஒரே ஒரு போட்டி நடைபெறும்.
ஏற்கனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா? புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் 6-வது பட்டத்துக்காக காத்திருக்கிறது. பெங்களூர், பஞ்சாப், டெல்லி அணிகள் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளன.
கடந்த சீசனில் அறிமுகமான குஜராத், லக்னோ அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஐ.பி.எல். போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.