போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.
சமீபத்தில் இவரது சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டது.
2012 -ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இதைத்தொடர்ந்து இவர் ‘லவ் டுடே’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனின் சமூக வலைதள கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த கணக்கை விக்னேஷ் சிவன் மீட்டெடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் சமூக வலைதள கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு மிக்க நன்றி. அப்ப.. அப்ப.. பண்ணுங்க ” என்று தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.