ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத் தொடர் எதிர்வரும் 27ம் திகதி முதல் மார்ச் மாதம் 24ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை தொடர்பான நிலைமை எவ்வாறான கட்டத்தை நோக்கிச் செல்லுமென பரவலாக அனைத்து தரப்பினராலும் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது.
இலங்கை தொடர்பில் இம்முறை 34வது கூட்டத் தொடரில் விசேட பிரேரணைகள் ஏதாவது கொண்டு வரப்படுமா அல்லது இலங்கை தொடர்பில் எவ்வாறான நகர்வுகள் இம்முறை நகர்த்தப்படும் என்பன தொடர்பில் அனைத்து தரப்பினரும் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
அதாவது கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் ஒரு பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்த பிரேரணையை இலங்கை எவ்வாறு நிறைவேற்றியது என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இம்முறை கூட்டத்தொடரில் விசேட அறிக்கையொன்றை வெளியிட இருக்கின்றார்.
அந்த அறிக்கை எவ்வாறு அமையப்போகிறது? அதில் என்ன விடயங்கள் முன்வைக்கப்படும்? இலங்கை தொடர்பில் திருப்தி வெளியிடப்படுமா அல்லது அதிருப்தி வெளியிடப்படுமா என்பதே தற்போது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கியிருந்த நிலையிலேயே இந்த அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு காணப்படுகிறது.
அந்தவகையில் இலங்கை அரசாங்கம் தனது கடமையையும் பொறுப்பையும் உரிய முறையில் நிறைவேற்றியதா இல்லையா என்பது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் அறிக்கை ஆராயவுள்ளது.
இதேவேளை இம்முறை கூட்டத்தொடரில் தனது பிரசன்னத்தை மேற்கொள்ளவுள்ள இலங்கை அரசாங்கமானது ஜெனிவா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு மேலும் கால அவகாசத்தை கோருமென எதிர்வு கூறப்படுகிறது.
அதுமட்டுமன்றி செய்ட் அல் ஹுசைனின் அறிக்கையில் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கும் வகையிலேயே அமையும் என்றும் அதனை ஒட்டியதாகவே இம்முறை கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் பிரேரணையும் இருக்குமெனவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் 27ம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் 28ம் திகதி இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்.
இதன்போது 2015ம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுப்பாரென கூறப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரானது ஒரு தீர்க்கமான தொடராக அமையவுள்ளது. அதாவது தமிழர் தரப்பு பிரேரணை அமுலாக்கம் தொடர்பில் சர்வதேசத்துக்கு எதனை கூறப்போகின்றது,
அரசாங்கம் எதனை வெளியிடப்போகிறது மற்றும் ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறான நிலைப்பாட்டை வெளியிடப்போகிறது என்பன இம்முறை கூட்டத்தொடரே தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன.
இந்தநிலையில் கடந்த வாரம் ஜெனிவாவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு பல்வேறு நாடுகளினதும் அமைப்புகளினதும் பிரதிநிதிகளை சந்தித்த பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கக்கூடாது என்றும் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையானது கடுமையான தொனியுடன் அமைய வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜெனிவா சென்றிருந்த அதன் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து உள்ளிட்ட 12 நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக கொண்டுவந்த பிரேரணைக்கு இலங்கையும் அனுசரணை வழங்கியிருந்தது.
அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டு 18 மாதங்கள் கடந்துள்ளபோதிலும் அதனை முழுமையாக நிறைவேற்றுவதில் தாமதம் காணப்படுகிறது. இந்நிலையில் அரசாங்கம் மீண்டும் கால அவகாசத்தைக் கோரவுள்ளது.
ஆனால் அந்தக் கால அவகாசத்தை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதும் வெளியுறவுக் கொள்கையில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை.
இலங்கை விடயத்தில் அமெரிக்கா கரிசனையுடனேயே உள்ளதாக அந்த நாட்டின் பிரதிநிதி தன்னிடம் உறுதியளித்ததாகவும் சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டிருக்கின்றார்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ள எழுத்துமூலமான அறிக்கை கடுமையானதாக அமையவேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார்.
அத்துடன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படாமலிருக்கின்ற விடயங்கள் தெளிவாக சுட்டிக்காட்டப்படவேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், காணிகளை விடுவிக்காமை போன்ற விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமை அலுவலகப் பிரதிநிதிகளிடம் சுமந்திரன் எம்.பி. எடுத்துரைத்திருக்கின்றார்.
அந்தவகையில் இம்முறை கூட்டத்தொடரானது பரபரப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் ஜெனிவா பிரேரணையை மேலும் அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் கோரவுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பானது கால அவகாசம் வழங்கக்கூடாதென தெரிவித்து வருகிறது.
எனவே, இது ஜெனிவாவில் ஒரு பாரதூரமான நிலைமையை இம்முறை கொண்டுவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.2015ம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.
எனவே, அந்தப் பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. எனினும் பிரேரணை நிறைவேற்றப்பட்டு 18 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை தமிழ் மக்களுக்கான நீதி வழங்கும் செயற்பாட்டில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.
காணாமல் போனோர் குறித்து ஆராய்வதற்கான அலுவலகத்தை அரசாங்கம் நியமித்தபோதுபாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கை மேலோங்கியது. ஆனால் இதுவரை அந்த அலுவலகம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
அதுமட்டுமன்றி அது தொடர்பான சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் அபகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாட்டிலும் கடந்த 18 மாதங்களில் பாரிய முன்னேற்றம் வெளிக்காட்டப்படவில்லை.
ஒரு சில இடங்களில் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் பெரும்பாலான காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. தமது காணிகளை விடுவிக்கக் கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றமையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.
அதேபோன்று, விசாரணைப் பொறிமுறை எவ்வாறு அமையுமெனவும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. இது தொடர்பில் மக்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு நியமிக்கப்பட்ட நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகளில் முக்கியமான பரிந்துரை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரான 18 மாத காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தமாகும்.
எனவே, இதுதொடர்பில் அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கவனம் செலுத்த வேண்டும்.கால அவகாசத்தை வழங்குவதனூடாக மக்களுக்கு நீதி கிடைக்கும் செயற்பாடு உறுதிப்படுத்தப்படுமா என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
எவ்வாறெனினும் அடுத்த கட்டம் என்ன நடக்கப் போகின்றது; எவ்வாறு அமைந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது நன்மை தரக்கூடியதாக இருக்கும் என்பன குறித்து தமிழர் தரப்பும் சிந்தித்து இம்முறை தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
எது எவ்வாறிருப்பினும் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
இந்த விடயத்தில் தொடர்ந்து இழுத்தடிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்