- இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.
- தேவிக்கு மாங்கல்யம் வாங்கி அணிவித்தால், மாங்கல்ய பாக்கியம் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் கோவிலாக விளங்கி வருகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இப்பிறவியிலேயே துன்பங்கள், துயரங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதி கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய சக்தி சொரூபினியான பார்வதிதேவி. உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள்.
கர்ப்ப கிரகத்தை 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும்மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதார காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.
மாசி மாதம் விழாவின் போது ‘கன்னியர் பூஜை’ என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறு வயது தோற்றத்தில் இருப்பது போல பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்கிறார்கள். இந்த நாளில் பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள்.
இந்த தலத்தில் உள்ள நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். இந்த வழிபாட்டின் போது தேவிக்கு மாங்கல்யம் வாங்கி அணிவித்தால், மாங்கல்ய பாக்கியம் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
பழஞ்சிறை தேவிக்கு வஸ்திரம் அணிவித்து, அரளிப்பூ மாலை சாத்தி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும்.இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
இத்தலத்தில் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து சுயம்வர அர்ச்சனை நடத்தினால் திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
அமைவிடம் :
திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அம்பலத்தரா என்ற இடத்தில் இருக்கிறது பழஞ்சிறை தேவி கோவில்.