இலங்கையில் திருமணம் முடிந்து தேனிலவுக்காக சென்று கொண்டிருந்தபோது, தனது மனைவி வேறு வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்றுள்ளதாக இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இளைஞனும் யுவதியும் வெளிநாடொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது காதல் தொடர்பு ஏற்பட்டிருந்த நிலையில் நாடு திரும்பியதும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 18 ஆம் திகதி மிகவும் ஆடம்பரமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணம் நிறைவடைந்து அவர்கள் இருவரும் தேனிலவைக் கொண்டாடுவதற்காக வாகனம் ஒன்றில் அம்பலாங்கொடை பிரதேசத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்றுக்கொண்டிருந்த போது இடைநடுவில் வைத்து மணமகள் தனது கணவனிடம் தனக்கு மிகவும் தாகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்போது, அப்பெண்ணின் கணவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடை ஒன்றுக்கு தண்ணீர் போத்தல் வாங்கி வருவதற்காக சென்றுள்ள நிலையில், வாகனத்தில் அமர்ந்திருந்த மனைவி திடீரென அதிலிருந்து இறங்கியதுடன் அந்தப் பக்கத்தினூடாக வந்த மற்றொரு வாகனத்தில் ஏறிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து அந்த நபர் தனது வீட்டாருக்கு இது தொடர்பில் அறிவித்து விட்டு அப்பகுதி முழு வதும் தேடியுள்ளார்.
எனினும் தனது மனைவியை எங்கு தேடியும் காணக் கிடைக்காமையால் அம்பாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.